Tuesday, August 31, 2010

Jackal and Drum

நரியும் மத்தளமும்

ஒரு காட்டில் நரி ஒன்று பசியோடு உணவுக்காக அலைந்துகொண்டிருந்தது. அது வழியில் ஒரு பாழடைந்த யுத்தகளத்திற்கு வந்து சேர்ந்தது. ஒரு மரத்தின் அடியில் ஒரு பெரிய பேரிகையை பார்த்து. திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. ஏதோ பயங்கர மிருகம் தான் தன்னை நோக்கி வருகிறது என்று நரி பயந்து ஓடி ஒரு மரத்தின் மறைவில் நின்று கொண்டு என்ன என்று திரும்பி பார்த்தது.

சற்று தொலைவில் பெரிய பேரிகையை ( மத்தளத்தை ) பார்த்தது. மரத்தின் கிளைகள் கார்றினால் மத்தளத்தின் மேல் பட்டு சப்தம் வந்து கொண்டிருந்தது. நரி மெதுவாக அதன் அருகில் வந்து பயம் நீங்கி மத்தளம் ஒரு பெரிய மிருகம்-தனக்கு நல்ல இறை என்று மகிழ்ந்து தோலை கடிக்க ஆரம்பித்தது.

தோலோ பழைய தோலானதால் கஷ்டப்பட்டு பல்லால் கடித்து ஓட்டை செய்தது. அதனுள் நல்ல ஆகாரம் இருக்கும் என்று ஏமாந்தது. ஆனாலும் தன்னுடைய பயம் நீங்கியது கண்டு மகிழ்ந்து மறுபடியும் இறையை தேட ஆரம்பித்தது.

எதை கண்டும் உடனே பயந்துவிடக்கூடாது என்று தெரிந்து கொண்டது.

Ungrateful Man

செய் நன்றி மறக்கும் மனிதன்

ஒரு ஊரில் ஒரு ஏழை பிராம்மணன் - ஹரி என்பவன் இருந்தான். அவன் ஏழையாய் இருந்தாலும் எல்லோருக்கும் உபகாரமாய் இருந்தான். சதா தெய்வத்தை பிரார்த்தனை செய்துகொண்டு காலத்தை போக்கி வந்தான். அவன் மனைவி அவனை-இப்படியே இருந்தால் நம் குழந்தைகள் பசியால் வாடுகின்றது. வெளியே போய் சம்பாதித்துவா என்று கடுமையாக சாடினாள்.

அந்த பிராம்மணனும் இனி தான் சும்மா இருக்கக்கூடாது, சம்பாதிக்க வேண்டும் என்று புறப்பட்டு சென்றான். வழியில் ஒரு பெரிய காட்டை கடக்கவேண்டியதாயிற்று. அப்போது ஒரு கிணற்றிலிருந்து-தன்னை காப்பாற்று என்று கூக்குரல்கள் கேட்டது. கிணற்றை எட்டி பார்த்தான். அதில் ஒரு மனிதன், ஒரு புலி, ஒரு பாம்பு, ஒரு குறங்கு ஆக நால்வர் மேலே ஏறிவரமுடியாமல் தவித்தன.

ஹரியை பார்த்த புலி- ஏ! பிராம்மணா! நீ என்னை காப்பாத்து, என்னை வெளியே எடுக்க முயர்ச்சி செய்வாய் என்று கெஞ்சியது. அதற்கு ஹரி நான் உன்னை வெளியே கொணர்ந்தால் நீ என்னை சாப்பிட்டுவிடுவாய் என்று பயமாய் இருக்கிறது என்றான். அதற்கு புலி-நான் நன்றி கெட்டவன் அல்ல-எனக்கும் குழந்தைகள் உள்ளன நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்றது.

ஹரியும்- ஆறிலும் சாவு, நூறிலும் சாவு இவனை காப்பாற்றுவோம் என்று புலியை வெளியே கொண்டுவந்தான்- புலியும் நன்றி தெரிவித்து விடை பெற்றுக்கொண்டது. அடுத்து குறங்கையும் வெளிக்கொணர்ந்தான். உடனே பாம்பும் இவனை கெஞ்சியது. அதற்கு ஹரி எனக்கு பயமாய் இருக்கிறது . நீ என்னை கடித்துவிட்டால் என்ன செய்வது-எனக்கு குழந்தைகள், மனைவி இருக்கிறார்கள் என்றான்.

அதற்கு பாம்பு-நாங்கள் அனாவசியமாக யாரையும் கடிக்கமாட்டோம்-எங்களை தொந்தரவு தருபவர்களை மாத்திரம் தான் கடிப்போம்-உனக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றது. ஹரி பாம்பையும் காப்பாற்றினான்.

அந்த மூன்றும் நன்றி கூறிவிட்டு உள்ளே இருக்கும் மனிதனிடம் ஜாக்கிரதையாக இரு என்று எச்சரித்துவிட்டு அவைகள் இருப்பிடத்தை காட்டிவிட்டு சென்றன. ஹரியோ அந்த மனிதனிடம் இரக்கப்பட்டு அவனையும் காப்பாற்றினான். அவன் ஒரு தங்க நகை செய்யும் தட்டான்.

ஹரி காடு முழுவதும் அலைந்து கடைசியாக களைப்புடன் குறங்கு இருக்கும் இடம் வந்தான். குறங்கும் மிக்க மகிழ்ச்சியுடன் அவனுக்கு மரத்திலிருந்து கனிகளை பறித்து கொடுத்தது. ஹரியும் நன்றி சொல்லிவிட்டு மேலே போனான். அங்கு புலியை பார்த்தான். புலிக்கோ சந்தோஷம்.புலி அவனை வரவேற்று நீயோ மாமிசம் சாப்பிடமாட்டாய். அதற்கு பதிலாக நான் சில தங்க நகைகளை தருகிறேன். அதை விற்று உன் குடும்பத்தை காப்பாற்று. இந்த நகைகள்-நான் ஒரு இளவரசன் இந்த வழியாக போனபோது அவனை கொன்று புசித்துவிட்டேன். அவன் அணிந்து கொண்டிருந்த நகைகள் தான் இவை என்றது.

அவனும் அவைகளை பெற்றுக்கொண்டு நாடு திரும்பினான். நல்ல பசி இருந்ததால் வழியில் ஒரு வீட்டை பார்த்தான். அவன் அதிர்ஷ்டம் அது தட்டானுடைய வீடு. தட்டானும் அடையாளம் கண்டு கொண்டு அவனை உபசரித்தான். அந்த சமயம் ஹரி தன்னிடம் இருந்த நகைகளை காண்பித்து அதை விலைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான்.

தட்டான் நகைகளை பரிசோதித்து இவைகளை தான் ராஜாவிற்கு இளவரசனுக்காக செய்து கொடுத்ததாக ஞாபகம் வரவே-ஒரு யோஜனை செய்தான். ஹரியை வீட்டிலேயே தங்க சொல்லி-தான் ராஜாவிடம் சமாசாரம் தெரிவித்தால் நல்ல வெகுமதி கிடைக்கும் என்றுஅவ்வாறு செய்து ராஜாவிடம் விவரம் சொன்னான். ராஜாவும் ஹரி தான் தன் மகனை கொன்று நகைகளை திருடி இருக்கிறான் என்று அவனை கைதி செய்து காராகிரஹத்தில் தள்ளிவிட செய்தான்.

ஹரி அப்போது புலி, குரங்கு, பாம்பு இந்த மனிதனை நம்பாதே என்று எச்சரித்ததை கேட்காததை நொந்துகொண்டான். அந்த சமயம் பாம்பை நினைத்தான். ஆச்சர்யமாக அந்த பாம்பு அவன் முன்னே தோன்றியது. ஹரி தன் கதையை சொன்னான். பாம்பு கவலை படாதே நான் உன்னை விடுவிக்கிறேன் என்று விலங்கை கடித்து அவனை விடுவித்தது.

அதோடு கூட ராஜாவிடமிருந்து நிறைய சன்மானம் பெற ஒரு வழியும் சொன்னது- தான் போய் இளவரசியை கடித்துவிடுகிறன். யாராலும் விஷத்தை எடுக்கமுடியாது. நீ ராஜாவிடம் தான் எடுப்பதாக கூறு. ராஜாவும் சம்மதிப்பான். பிறகு என்னை கூப்பிடு. நான் எடுத்துவிடுகிறன். ராஜாவும் உனக்கு நிறைய சன்மானம் தருவான். அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்றது.

அவனும் அப்படியே செய்தான். ராஜாவிடம் தட்டான் செய்த துரோகத்தை சொன்னான். ராஜாவும் தட்டானை தண்டித்து-ஹரிக்கு நிறைய சன்மானம் கொடுத்தனுப்பினான்

ஹரி பாம்பு, புலி, குரங்கிற்கு நன்றி தெரிவித்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தான்.

செய் நன்றி மறந்தவன் கொடிய பாபி. அவனுக்கு மன்னிப்பே கிடையாது.

Two Headed Crane

இரு தலை கொக்கு

நூறாண்டுகளுக்கு முன்னால் நமது தேசத்தில் பல அதிசயமான நிகழ்ச்சிகள், படைப்புகள் இருந்தன. ஒரு காட்டில் ஏறியில் சில அதிசய பறவைகள் வசித்து வந்தன. அதில் ஒன்று இரு தலைகளுடைய கொக்கு ஒன்றும். அதற்கு உடல் ஒன்று, தலை இரண்டு.

தலைகள் இரண்டும் வெவ்வேறாக செயல் பட்டதால் அவைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. கடைசியாக மிஞ்சியது ஒரே பறவை. ஒரு சமயம் இந்த பறவை இரையை தேடி அலைந்தது. இரு தலைகளும் வெவ்வேறாக தேட ஆரம்பித்தது. அதில் ஒரு தலை அமிர்தம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தது.

அதற்கு ஒரே ஆனந்தம். அதை அவசரமாக பறுக ஆரம்பித்தது. இன்னொரு தலை எவ்வளவோ கெஞ்சி கேட்டபோதிலும் அது தராமல் எல்லாவற்றையும் குடித்து தீர்த்துவிட்டது. மற்ற தலைக்கு பொறாமை, கோபம். அப்படியே போய்கொண்டிருந்தபோது அது ஒரு விஷ திரவத்தை கண்டது. வஞ்சம் தீர்ப்பதற்காக அதை குடிக்க ஆரம்பித்தது.

அது உடல் ஒன்று தான் என்பதை மறந்துவிட்டது. சிறிது நேரத்தில் அது இறந்து விழுந்தது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

Lion, Cat and Rat

சிங்கம், எலி, பூனை

ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடியில் ஒரு சிங்கம் வசித்துவந்தது. இதன் பொந்தில் ஒரு எலியும் இருந்தது. அது ஒரு விஷமக்கார எலி. சதா சிங்கத்தின் மேல் ஏறி அங்கும் இங்கும் குதிக்கும். அதன் வாலை கடித்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும். எலியின் இம்ஸையை பொருக்காமல் சிங்கம் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தீர்மானித்து, வெளியே சென்று ஒரு பூனையை பார்த்தது.

பூனையிடம் நீ என்னோடு வந்து தங்கு, உனக்கு ந்ல்ல ஆகாரம் தினமும் நான் கொடுக்கிறேன் என்றது. பூனையும் சம்மதித்து அதன் இடம் வந்தது. அந்த பொந்தையும் காவல் காத்தது. எலி பயந்துகொண்டு வெளியே வரவில்லை. பல நாட்கள் சென்றன. எலி பசியால் வாடி கடைசியில் பொந்தை விட்டு வெளிவந்தது. பூனை அதை பிடித்து தனக்கு இறையாக ஆக்கிக்கொண்டது.

இதற்கு பிறகு கொஞ்ச நாளில் சிங்கம் தன்னுடைய தொந்தரவு ஒழிந்தவுடன் பூனையால் இனி நமக்கு பிரயோஜனம் இல்லை என்று அதை அசட்டை செய்தது. அதற்கு ஆகாரம் கொடுக்க மறுத்தது. பூனையும் பசியால் வாடி இறந்தது.
ஒரு நல்ல, புத்திசாலியான வேலைக்காரன் தன் எஜமானன் அவனுடைய உதவியை எப்போதும் நாடும்படியாக வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அவன் சுகமாக இருக்கமுடியும்.

The Elephant and Jackal

ஹிதோபதேச கதைகள்-12

யானையும் நரியும்

ஒரு காட்டில் பல நரிகள் கூட்டமாக வாழ்ந்துவந்தன. ஒரு நாள் அதன் வழியே ஒரு யானை சென்றுகொண்டிருந்தது. நரி கூட்டத்தின் தலைவன்-ஒரு வயசான நரி யானையை பார்த்து இவன் நமக்கு இரையானால் நமக்கு நல்ல விருந்து கிடைக்கும், நமக்கும் பல நாட்கள் ஆகாரம் இருக்கும் என்றது.

அதை கேட்ட மற்ற நரிகள்- இவ்வளவு பெரிய யானையை நம்மால் எப்படி கொல்ல முடியும்-நாமோ ஒரு துரும்பு-அதன் முன்னால்- என்றன. அதற்கு தலைவன் சொன்னான்- ஆம் நாம் சிறு துரும்புதான் ஆனால் சிறு துறும்பும் பல் குத்த உதவும்-நாம் நம் மூளையை உபயோகப்படுத்தினால் இந்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தலாம் என்று அதை செய்ய முன் வந்தது.

அது யானையிடம் போய்-ஓ! அரசே! எங்களின் மனமார்ந்த நமஸ்காரம் என்று வணங்கியது. யானை அதிச்சியடைந்து நரியை பார்த்து-நீங்கள் யார், எனக்கு உங்களை தெரியாதே என்றது.

நரி உங்களுக்கு எங்களை தெரியாது-வாஸ்தவம். ஆனால் உங்களை எங்களுக்கு தெரியும். உங்கள் பராக்ரமத்தை நாங்கள் அறிவோம். இந்த காட்டில் தற்போது ராஜா யாரும் இல்லை. ராஜா இல்லாத நாடு ஆபத்தானது. மக்கள் சுகமாக வாழ முடியாது. செல்வம் சேர்க்கமுடியாது. நீங்கள் பலசாலி. இனி நீங்கள் தான் எங்களுக்கு அரசன்.

உங்களை முறைப்படி பட்டாபிஷேகம் செய்து வைக்கிறோம் என்றது. யானையும் மகிழ்ச்சியடைந்து ஒப்புக்கொண்டது. நரி யானையை தன் பின் தொடரமாறு கேட்டுக்கொண்டது. யானையும் அதன் பின்னே சென்றது. ஒரு புதர் வழியே கூட்டி சென்றது. அந்த பாதையில் ஆழமான சகுதி நிறைந்த பள்ளம் இருந்தது. அது தெரியாமல் யானை பள்ளத்தில் விழுந்தது.

கரையேறமுடியாமல் வாடி முடிவில் உயிரை விட்டது. நரிகளுக்கு ஒரே கும்மாளம். தங்களுக்கு நிறையாக பல நாட்களுக்கு ஆகாரத்திற்கு குறைவில்லை என்று ஆனந்தம் அடைந்தன.

நல்ல சகவாசம் நலத்தை தரும். கெட்ட சகவாசம் பாதாளத்தில் தள்ளிவிடும்.

Don't Advice Fools

முட்டாளுக்கு அறிவுரை சொல்லாதே!

காவேரி கரை ஓரத்தில் ஒரு பெரிய ஆலமரம் தழைத்தோங்கி பல கிளைகளுடன் இருந்தது. அதில் பட்சிகள் எல்லாம் கூடு கட்டிக்கொண்டு ஆனந்தமாக வசித்து வந்தன. அந்த மரம் அவைகளுக்கு நல்ல பாதுகாப்பாக இருந்தது.

மழை காலம். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. அந்த சமயம் குரங்கு கூட்டங்கள் மழைக்காக மரத்தின் அடியிலும் கிளைகளிலும் தங்கின. அவைகளை பார்த்த பறவைகள் எள்ளி நகைத்து- குரங்குகளே! இப்படி மரத்துக்கு மரம் தாவி வீணே காலத்தை கழிக்கிறீர்களே-உங்களுக்கென்று ஒரு வீடு எங்களைபோல் கட்டிக்கொண்டிருக்ககூடாதா? என்று அறிவுரை கூறியது.

பறவைகளின் இந்த அறிவுரை குரங்குகளுக்கு பிடிக்கவில்லை. மழை நிற்கட்டும், இவைகளுக்கு புத்தி புகட்டலாம் என்று மழை விட காத்திருந்தன.
மழை விட்டவுடன் எல்லா குரங்குகளும் மரத்தின் மேல் ஏறி எல்லா கூண்டுகளையும் அழித்துவிட்டு முட்டைகளையும் உடைத்து போட்டுவிட்டு போய்விட்டது.

பறவைகள் பயத்தால் அங்கும் இங்கும் பறந்து-தாங்கள் முட்டாள்களுக்கு போய் அறிவுரை சொன்னோமே என்று வருத்தப்பட்டன.

முட்டாள்களுக்கு அறிவுரை கோபத்தை தான் கிளரும்-விபரீதத்தில்ல் முடியும்.

Srirangam-spiritual exotic


தேரோடும் வீதி


சமீபத்தில் நான்  ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். 10-நாள் அரங்கனுக்கு பவித்ரோத்ஸவம் உத்ஸவம். ஆரம்ப நாளே பெருமாளுடைய புறப்பாடை சேவிக்க ஆவலுடன் திருமாமணி மண்டப வாயிலில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று சரியாக இரவு  7- மணிக்கு புறப்பாடு.

நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ ஸ்ரீமாந்தாங்கிகளை ( பெருமாளை ஏலபண்ணுபவர்கள் ) அழைத்துவரும் அழகே தனி. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தானது. நாதஸ்வரத்துடன் அவர்கள் மண்டபத்தின் வாயிலில் வரிசையாக நிற்பார்கள்.

அவர்கள் உடை அழகே தனி. எல்லொரும் ஒரே மாதி பஞ்சககச்சம் அணிந்து தலையில் ஆரஞ்சு சிவப்பு தலைப்பாகையுடன் பணிவன்புடன் பெருமாளின் உத்தரவுக்காக காத்திருப்பார்கள். உத்தரவு கிடைத்தவுடன் உள்ளே சென்று பெருமாளை ஏலபண்ணிகொண்டு கிளம்புவார்கள். பெருமாள் ராஜ நடையுடன் நுழை வாயிலை தாண்டும்போது-சாத்தாதர் கட்டியம் கூறுவார். சிம்மம் போல் நடந்து வந்து  சற்று வினாடி கருடனை பார்த்துவிட்டு கம்பீரமாக திரும்பி மேற்கு வாயிலின் அருகே நிற்பார்.

அவர் வெளியே வரும் சமயம் ஜீயரும் மற்றவர்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு தீர்த்தம், சடாரி பெற்றுக்கொண்டு விடை பெறுவார்கள். பெருமாள் படியைவிட்டு இரங்கி சற்று நேரம் எதிரே உள்ள கண்ணாடி அரை முன் நின்று பவித்ரோத்ஸவ மண்டபத்தை நோக்கி புறப்படுவார்.  

ஒரே ஓட்டம் தான்-பெருமாள் 10-நிமிடத்தில் துவஜஸ்தம்பத்தை தாண்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை அடைவார். அங்கே திருவந்திகாப்பு கண்டருளி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்காக காட்சி கொடுப்பார். இது 10- நாளிலும் நடைபெறும்.

பவித்ரோத்ஸவம் எதற்காக நடைபெறுகிறது?

பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம், ஆராதனமும், அமுதுபடியும் ஆகம முறைப்படி நடைபெறவேண்டும். சுழல் முறையில் பட்டர்கள் இதை மேற்கொள்வார்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் ஏற்படலாம். அதே போல அலங்காரத்திலும், ஆடைகளிலும் குறைபாடுகள் ஏற்படலாம். அதற்கு பரிகாரம் தான் இந்த பவித்ரோத்ஸவம்.

பவித்ரமான    புணூலை அணிவித்து ஹோமம் முதலான விதிகளை இந்த 10-நாட்களிலும் அனுசந்தித்து வெகு ஜாக்கிரதையாக பவித்ரோத்ஸவ மண்டபத்தில் பெருமாளை தினம் எழுந்தருளப்பண்ணி பக்தர்களுக்கு அநுக்ரஹம் செய்ய இந்த விழா. இது முடிந்தவுடன் பவித்ரங்களை கலைந்துவிட்டு பழைய படி தினம் பூஜாகாலம் தொடரும்.

இந்த 10-நாளில் ஒரு நாள் நான் தேரோடும் சித்திரை தெருவில் வீதி ப்ரதக்ஷிணம் செய்ய சென்றேன். முக்கியமாக பலவருஷங்களுக்கு பிறகு இந்த வீதிகள் எப்படி மாறி இருக்கின்றன, பழைய சம்பிரதாயம் தொடருகிறதா என்று அறிய ஆவல்.

எனக்கு நான் சற்றும் எதிபாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பழைய வீதிகள் முழுவதும் மாறிவிட்டது. ஸ்ரீரங்கம் தன் புராதண சரித்திரத்தை இழந்துகொண்டிருப்பது கண்கூடாக காண முடிகிறது.

அந்தகாலத்தில் வீடுகள் வாசலில் திண்ணையுடன் அழகாக இருக்கும். முக்கியமாக யாத்ரீகர்கள் ஒரு நாள் அல்லது 2- நாட்கள் தங்க இந்த திண்ணைகள் பயன்பட்டு வந்தன. வெய்யல் காலங்களில் வீட்டு சொந்தக்காரர்கள் வெளியில் படுத்து உறங்கவும், பயணிகள் சற்று இளைப்பாரவும் பயன்பட்டுவந்தன.

அநேகமாக இந்த வீடுகள் 10-15 அடி அகலம், 100 அடி நீளமாக இருந்தன. ஒரே ஒரு அறை தான் வாசலை நோக்கி இருக்கும். புதிதாக கல்யாணமான சிறுசுகளைத்தான் இங்கு படுக்க சொல்வார்கள். மற்றபடி எல்லோரும் சேர்ந்தே வாழ்வார்கள். ( JOINT FAMILY ). துன்பத்திலும் இன்பத்திலும் சம பங்கு. கல்யாணம் என்று வந்தால் கோலாகலம் தான். அதுமாதிரி வீதியில் பெருமாள் ஏளினால் கல்யாண களைதான். விதம் விதமான கோலங்கள்-போட்டி போட்டுக்கொண்டு இளம் பெண்கள் அழகாக பாவாடை தாவனியுடன் கோலம் போடுவார்கள்.

வருஷம் 300 நாளும் பண்டிகை நாள் தான் ஸ்ரீரங்கத்தில்-ரங்கன் வீதியில் வலம் வரும் காட்சியே தனி காட்சி தான்.யானையும், குதிரையும் முன்னே செல்ல நாதஸ்வரம் வாசிக்க நம் பெருமாள் தேரோடும் சித்திரை, உத்திர வீதிகளில் பவனி வரும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். பெருமாளுக்கு இன்றும் எண்ணை விளக்கு தான்-கேஸ் லைட் கிடையாது.

நடந்து கொண்டே வலம் வரும்போது மேற்படி காட்சிகள் என் மனதில் அலையோடின. ஆனால் இன்று வீதிகள் முழுக்க மாறிவிட்டது. பழைய வீடுகளை இடித்து புதிதாக வீடுகள். திண்ணை எல்லாம் போய்விட்டது. அதற்கு பதிலாக கேட் போட்ட காம்பவுண்ட்-வாகனங்கள் நிறுத்த. பெருமாள் வரும் சமயம் அவசர அவசரமாக ஒரு சிறு கோலம். இளம் பெண்களை காணவில்லை.சூரிதாரும்,சால்வார் கமீஸும் தான்.

அந்த நாளில் வீசிய தெய்வீக மணம் குறைந்துவிட்டது. இருந்தாலும் பலர் பழைய சம்பிரதாயங்களை கட்டி காக்க போராடுகிறார்கள். அரங்கனுக்கு நடக்கும் திருவிழா தொடர்ந்து பழைய பாணியிலேயே நடந்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். புதுமை வேண்டும் . ஆனால் அது பழமையின் மேன்மையை தழுவி அமையவேண்டும்.

10-நாள் உத்ஸவத்தை கண்குளிர கண்டு அரங்கனோடு இணைந்துவிட்டு பிரிய மனமில்லாமல் எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்கின்றது. மீண்டும் அரங்கனை காண எப்போது? தெரியவில்லை.

-------------------------------------