Monday, September 13, 2010

பாம்பும், தவளையும்


ஒரு குளத்தில் பல தவளைகள் வசித்து வந்தன. அவர்களுக்கு ராஜா, ராணி இருந்தார்கள். அவர்களுக்கு எதிரிகளே இல்லாததால் பயம் இன்றி இஷ்டம்போல் விளையாடியும் உணவும் அருந்திக்கொண்டு காலத்தை போக்கி வந்தன.

ஒரு நாள் ஒரு வயதான பாம்பு அந்த பக்கம் வந்தது. குளத்தில் நிறைய தவளைகள் இருந்ததை கண்டது. தான் எப்படியாவது இங்கேயே நிரந்தரமாக தங்க முடிந்தால், வயதான காலத்தில் இறை தேட அவசியம் இல்லாமல் காலத்தை போக்கிவிடலாம்-எப்படியாவது இந்த தவளைகளை சிநேகிதம் செய்து கொண்டால் நல்ல ஆகாரம் தினமும் கிடைக்கும் என்று ஒரு திட்டம் தீட்டியது.

அப்போது சில குஞ்சு தவளைகள் அதன் அருகில் வந்தன. ஏதோ நீளமாகவும், வழவழப்பாகவும் இருப்பதை கண்டு பயந்தன. கிழ பாம்பு அவைகளை, தன்னை கண்டு பயப்படவேண்டாம், தனக்கு வயதாகிவிட்டது, பல் எல்லாம் போய்விட்டது, முன்பு மாதிரி வேகமாக செல்லமுடியாது, தன் அருகில் வர சொல்லிற்று. அவைகள் வந்தவுடன் அவைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு பவனி வந்தது. தவளைகளுக்கு படு குஷி.

அவைகள் குளத்திற்கு சென்று தன் பெற்றோர்களுக்கு நடந்ததை சொல்லி மகிழ்ந்தது. பெற்றோர்களும் அடுத்த நாள் முதல் பாம்பின் மேல் ஏறி சவாரி செய்தன. பிறகு ராஜாவும், ராணியும் பாம்பை சிநேகம் செய்து கொண்டன. இப்படியே சில காலம் சென்றன.

பாம்பும் தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ராஜாவின் சிநேகத்திற்காக காத்திருந்தது. அது கிடைத்தவுடன் ஒரு நாள் கலைப்பாக படுத்துக்கொண்டு ( நடிப்பு ) மயக்கமாக இருப்பது போல் நடித்தது. ராஜா வந்தவுடன் பாம்பை பார்த்து கவலைப்பட்டது. காரணத்தை கேட்டது. பாம்பு தனக்கு வயதாகிவிட்டது, கண் சரியாக தெரியவில்லை, தன்னால் இறை தேட முடியவில்லை என்று வருத்தப்பட்டது.

ராஜாவும் இரக்கப்பட்டு, குளத்தில் நிறைய தவளைகள் இருக்கின்றன- இனி தினமும் இதற்கு இறையை அனுப்பலாம் என்று தீர்மானித்தது. அதுபடியே    நடந்தது. சில காலம் சென்றவுடன் குளத்தில் தவளைகள் எல்லாம் காலி. மிஞ்சியது ராஜாவும், ராணியும். அவைகளையும் பாம்பு இறையாக்கி கொண்டது.

தகாத  உறவு விநாசத்தில் தான் முடியும். எதிரிகளின் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைக்க கூடாது.

-------------


No comments:

Post a Comment