ஹிதோபதேச கதைகள்-4
ஒரு நாயும் கழுதையும்
வாரணாசி என்ற புண்ய ஸ்தலத்தில் ஒரு வண்ணான் வசித்து வந்தான். அவன் ஒரு கழுதையையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தான். கழுதையை துணிகளை ஆற்றுக்கு சுமந்து வருவதற்கும் நாயை வீட்டு காவலுக்கும் உபயோகப்படுத்திக்கொண்டான்.
கழுதை பெரிய மூட்டைகளை முதுகு ஒடிய சுமந்துகொண்டு மெதுவாக போகும். வண்ணான் அதி குச்சியால் அடித்துகொண்டே போவான். வீட்டில் நாயோ வண்ணான் வரும் வரை வீட்டு வாசலில் உறங்கிகொண்டே இருக்கும். வண்னான் அதற்கு போகும்போது தீனி போட்டுவிட்டு போவான். வந்தபின்னும் அதற்கு தீனி கிடைக்கும்.
கழுதை இதை பார்த்துகொண்டே இருக்கும். அதற்கு ரொம்ப பொறாமை- நாம் தினமும் பொதி சுமந்து, அடிவாங்கி போதும் போதாமல் தீனியை தின்று கஷ்டப்படுகிறோம். ஆனால் இந்த நாயோ சுகமாக தீனியை தின்றுவிட்டு பகலில் வீட்டை காக்கின்றேன் என்ற பெயரில் நாள் முழுவதும் தூங்கிகொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டே ஒரு நாள் நாயையே கேட்டும் விட்டது.
அதற்கு நாய் என் வேலை வீட்டை காவல் காப்பது-உன் வேலையோ பொதி சுமப்பது. நீ உன் வேலையை செய்-நான் என் வேலையை செய்கின்றேன் என்று காட்டமாக பதில் சொல்லிவிட்டது. கழுதையும் பேசாமல் படுத்துவிட்டது.
ஒரு நாள் இரவில் இரண்டும் உறங்கிகொண்டிருக்கும்போது மெதுவாக ஒரு திருடன் சுவர் ஏறி குதிப்பதை நாயும் ஒரு கண்ணால் பார்த்துவிட்டது.கழுதையும் பார்த்துவிட்டது. நாயோ குலைக்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்தது. இதை பொறுக்காமல் கழுதை நாயை பார்த்து கேட்டது-நீ எஜமானனுக்கு இப்படி துரோகம் செய்யக்கூடாது. திருடனை நீ பார்த்தை நானும் பார்த்தேன்-அப்படி இருக்குக்போது நீ ஏன் குறைக்காமல் இருக்கிறாய் என்று கேட்டது.
அதற்கு நாய்-நீ உன் வேலையை கவனி-நான் என் வேலையை கவனித்துக்கொள்கிறேன்-என் விஷயத்தில் தலை இடாதே. நான் சும்மா இருப்பதற்கு காரணம் உண்டு. பல நாட்களாக நான் எஜமானன் இல்லாதபோதும் கவனமாக பார்த்துகொண்டிருக்கின்றேன். ஆனால் சமீப காலமாக எஜமானன் என்னை அலட்சியம் செய்துவருகிறான்-என்னை கவனிப்பதில்லை-தீனியும் சரியாக
போடுவதில்லை-அவனுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்-நீ சும்மா இரு என்று கோபமாக பேசிவிட்டு படுத்துக்கொண்டது.
கழுதைக்கு பொறுக்கமுடியவில்லை. நீ ஒரு துரோகி. உண்ட வீட்டிற்கு துரோகம் செய்பவன்-கஷ்டகாலத்தில் பழி தீர்த்துகொள்வது போன்ற செயல்கள் செய்பவன்-கெட்டவன் யஜமான துரோகி. நீயோ யஜமானனை காக்க வேண்டிய சமயத்தில் அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாய். நீ இப்போது யஜமானனை எழுப்பாமல் இருந்தால் நான் எழுப்புகிறேன் என்று பலமாக கத்திற்று. இதை கேட்ட திருடன் ஓடிவிட்டான்.
வண்ணான் பாதி தூக்க கலக்கத்தில் தன்னை இந்த கழுதை கத்தி எழுப்பிவிட்டதை கண்டு கோபமாக வெளியே வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்- யாரையும் காணவில்லை. அவனுக்கோ படு கோபம்-தன் தூக்கம் கலைந்துபோனதால். ஒரு குச்சியை எடுத்து கழுதையை விளாசு விளாசென்று அடித்துவிட்டு மறுபடியும் தூங்கபோய்விட்டான்.
கழுதையோ வலி பொறுக்காமல் துடித்தது. அதை கண்டு நாய் நகைத்தது-பார்த்தாயா! உன்னுடைய யஜமான விச்வாஸத்திற்கு கிடைத்த பரிசை! இனிமேலாவது நீ உன் வேலையை பார்த்துகொண்டு போ-நான் என் வேலையை பார்த்துக்கொள்கிறேன்-மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிடக்கூடாது.
கழுதையோ தனக்கு கிடைத்த பரிசை நினைத்து பேசாமல் இருந்துவிட்டது,
----------------------------------
No comments:
Post a Comment